கோலாலம்பூர், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசியா மீது விதிக்கப்பட்டிருக்கும் 24 விழுக்காடு பரஸ்பர வரி தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள, ஏப்ரல் மாத இறுதியில் புத்ராஜெயா தனது அதிகாரிகளை வாஷிங்டனுக்கு அனுப்பும்.
24 விழுக்காட்டுப் பரஸ்பர வரிக்கு மலேசியா உட்பட்டிருந்தாலும், இறுதி எண்ணிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட பொருள்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
"ஆனால், முக்கியமானது என்னவென்றால், தாக்கத்தைப் புரிந்துகொண்டு எழுப்பப்படும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனுடன், அதிக புரிதலை ஊக்குவிப்பதற்காக நல்ல விவாதங்களை நடத்தவும், தற்போது உள்ளதை விட சிறந்த முடிவைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டறியவும் நாங்கள் அமெரிக்கா செல்வோம்," என்று அவர் கூறினார்.
மலேசியாவும் ஆசியானும் திறந்த மற்றும் சுதந்திர வர்த்தகத்தைக் கடைப்பிடித்தாலும், ஒவ்வொரு நாடும் வெவ்வேறு அளவிலான வர்த்தக வளர்ச்சி மற்றும் கட்டணங்களைக் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா விவரித்தார்.
இன்று, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025 ஆசியான் முதலீட்டு மாநாட்டின் தொடக்க விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)