கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) -- இவ்வாண்டிற்கான பேரிடர் நிர்வகிப்பிற்கு உதவும் வகையில், மத்திய அரசாங்கம் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா மூலம் ஒரு கோடியே 47 லட்சம் ரிங்கிட் நிதியை சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட்டும், உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு தலா 10,000 ரிங்கிட் என IHSAN உதவி நிதி, BWI வழங்கப்படுவதாக, நட்மா தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ் தெரிவித்தார்.
கடந்த வாரம், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்த உதவி நிதி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
அதோடு, அச்சம்பவத்தினால் முற்றாக அழிந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் 5,000 ரிங்கிட்டும் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் 5,000 ரிங்கிட் என மொத்தம் 10,000 ரிங்கிட் வழங்கப்படுவதாக கைருல் ஷாரில் குறிப்பிட்டார்.
இதனிடையே, தங்கள் வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடையும் வரையில், வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு ஆறு மாத காலகட்டத்திற்கு தலா 2,000 ரிங்கிட் உதவி நிதியை வழங்க சிலாங்கூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)