பிரிக்பீல்ட்ஸ், 14 ஏப்ரல் (பெர்னாமா) - குரோதி ஆண்டிற்கு விடைக்கொடுத்து இன்று அதிகாலை மணி 5.07 முதல் விசுவாவசு ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.
தயாள சிந்தனை மற்றும் செல்வம் கொழித்தல் என்ற அர்த்தத்துடன் புதிதாய் பிறந்திருக்கும் இவ்வாண்டின் முதல் நாளான இன்றைய தினத்தில் வாழ்வில் வளங்களையும் நலங்களையும் நிறைவாய் பெறும் நோக்கில் விருப்ப தெய்வத்தை வணங்கி பொழுதைத் தொடங்குவதையே பலரும் தங்களின் முதற்கடமையாகக் கொண்டிருப்பர்.
அந்த வகையில், பிரிக்பீல்ட்சில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வீர ஹனுமான் திருத்தலத்திலும் பக்தர்கள் திரள சித்திரைப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு இனிதே நடைபெற்றது.
புதிய ஆண்டை செழிப்போடும் உற்சாகத்தோடும் வரவேற்க அதிகாலை மணி 6.30 தொடங்கியே ஆலயத்தில் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகள் ஆரம்பமாகின.
வேலை நாளாக இருந்தாலும்,காலைத் தொடங்கியே திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை புரிந்த வண்ணமாக இருந்த வேளையில், சிலர் வேலைக்குச் செல்வதற்கு முன்னதாகவும் ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்வதைக் காண முடிந்தது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஆஞ்சநேயருக்குப் பிடித்த துளசி, வெற்றிலை, கொய்யா, லட்டு, வடை ஆகியவற்றைப் படைத்து வழிபட்டுச் சென்றனர்.
இன்றைய தினத்தில் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு வழிபாடுகள் குறித்தும் இவ்வாண்டின் மகத்துவம் குறித்தும் ஆலய தலைமை அர்ச்சகர் ராமநாதன் பட்டாச்சாரியார் பகிர்ந்து கொண்டார்.
"சித்திரை மாதத்தின் போது தமிழ் பஞ்சாகம் வாசிக்கப்பட்டு, அவ்வாண்டில் இலாப, நட்டம் குறித்து அறிந்து கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியுள்ள பக்தர்கள் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சோகமான நினைவுக ஆகியவை இவ்வாண்டில் இருக்கக்கூடாது என்று மனமார வேண்டிச் செல்வர்," என்று அவர் கூறினார்.
மகிழ்ச்சி, மன உளைச்சல், பரபரப்பான வாழ்க்கைச் சூழல் என்று பல்வேறு மனநிலைகளை ஆண்டுதோறும் கடந்து வரும் வேளையில், பிறந்திருக்கும் புத்தாண்டு அனைத்து ரீதியிலும் சிறந்த ஆண்டாக விளங்க வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுதலாக இருந்தது.
அதிலும் சிலர், இவ்வாண்டில் தாங்கள் பெற்ற வெற்றிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
''வாகனம் ஒன்று வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தோம், இன்றுதான் அதற்கான அனுமதி வங்கியிலிருந்து கிடைத்துள்ளது. இதுவே எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்று ஷா ஆலாமைச் சேர்ந்த செல்வம் மாயாண்டி என்பவர் தெரிவித்தார்.
''கடந்த ஆண்டு நான் வேண்டிய பல நல்ல காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,'' என்று கிள்ளானைச் சேர்ந்த மோனாப்பிரியா கிருஷ்ணசாமி நாயுடு என்பவர் தெரிவித்தார்.
''கடந்த ஆண்டு எங்களுக்கு பிள்ளை இல்லை. இதே ஆலயத்திற்கு வந்து வேண்டிச் சென்றோம். இவ்வாண்டு பிள்ளை பிறந்து பத்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதைவிட மகிழ்ச்சி ஒன்றும் இல்லை,'' என்று செலாயாங்கைச் சேர்ந்த பிரேம் பன்னீர் செல்வம் என்பவர் தெரிவித்தார்.
இதனிடையே,புத்தாண்டின் முதல் நாள், முகம் பார்க்கும் கண்ணாடி, ரொக்க நோட்டுகள், முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல், தானியம் போன்ற மங்களப் பொருட்களை வழிபாட்டு அறையில் வைத்து அவற்றை அதிகாலையில் கண்டால் வாழ்வில் செல்வம் பெருகி மகிழ்ச்சி நிலைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)