கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- தியோ பெங் ஹோக்கின் மரண வழக்கு விசாரணை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.
அந்த விசாரணை அறிக்கை விரைவில் அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் பூர்த்தி செய்து சரிபார்க்கப்படும் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்.
''வரையறுக்கப்பட்ட விசாரணை இது. இதற்கு காரணம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இச்சம்பவம் நிகழ்ந்தது. சில சாட்சியாளர்களை நாங்கள் மீண்டும் நேர்காணல் செய்ய முடியவில்லை. நாங்கள் குடும்ப தரப்பையும் அழைத்தோம். அவர்களும், விசாரணை அறிக்கையை சரிபார்க்க நல்ல ஒத்துழைப்பை வழங்கவில்லை,''என்றார் அவர்.
இன்று, புக்கிட் அமான் அரச மலேசிய போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
தியோ மரண வழக்கு விசாரணையை பூர்த்தி செய்ய கடந்தாண்டு நவம்பர் 21-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அரச மலேசிய போலீஸ் படைக்கு உத்தரவிட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)