கோலாலம்பூர், 15 ஏப்ரல் (பெர்னாமா) - 2002-ஆம் ஆண்டு இறுதியில் நாட்டின் நிதிநிலைமை சற்று தொய்வடைந்திருந்த வேளையில், 2003-ஆம் ஆண்டு ஐந்தாவது பிரதமராகப் பொறுப்பேற்ற துன் அப்துல்லா அஹ்மட் படாவி அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை சீர்ப்படுத்தினார்.
அம்னோவில் இருந்த காலக்கட்டம் மற்றும் அரசியலில் வெற்றி நடைப்போட்ட சமயத்தில் மட்டுமின்றி, பிரதமராக இருந்த வேளையிலும், அதிகாரத் தொனியில் அதிர பேசாமல் தன்னடக்கத்தோடு நடந்து கொண்ட துன் அப்துல்லா படாவி,
தலைமைத்துவதற்கு சிறந்த உதாரணமாவர் என்று பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் புகழாரம் சூட்டினார்.
அவர் பிரதமராக பொறுப்பேற்றிருந்த சமயத்தில் அனைத்து சமூகத்தினருடனும் கொண்டிருந்த அணுகுமுறை போற்றுதலுக்குரியது.
தமது பதவிக் காலத்தில் எந்த சமூகத்தினரையும் வேதனைப்படுத்தாமல், அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து அதை நிறைவேற்றி வைத்த அவரின் அற்புதமான நினைவுகளை எப்போதுமே மறக்க முடியாது என்றும் முனைவர் இராஜேந்திரன் தெரிவித்தார்.
"அவர் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், தமிழ், மலாய், சீன ஆரம்பப் பள்ளிகளை ஒருங்கிணைத்து வாவாசான் பள்ளிகள் திட்டத்தை இவர்தான் அறிமுகப்படுத்தி இருந்தார். மாணவர்களிடத்தில் ஒருமைப்பாட்டு உணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்த தலைவர் அவர்," என்று முனைவர் இராஜேந்திரன் குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டிற்காக துன் படாவி முன்னெடுத்த பல திட்டங்களில் அதுவும் ஒன்று என்று முனைவர் இராஜேந்திரன் கூறினார்.
இதைத் தொடர்ந்து கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி, 13 அரசு சாரா இயங்கங்களின் தலைவர்களை அழைத்து அவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தை துன் படாவி மேற்கொண்டிருந்ததையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
"அக்கூட்டத்திம் இந்திய சமுதாயத்தின் தேவைகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் இதைப் பகிர்கிறேன். அக்கூட்டத்தில் அவரின் அரவணைப்பு, அணுகுமுறை, வெளிப்படைத் தன்மை ஆகியவை சிறப்பாக வெளிப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய பல விஷயங்களை அவர் நடைமுறைப்படுத்தினார் என்பதையும் என்னால் உறுதியாக் கூற முடியும்," என்றார் அவர்.
குறைந்த தவணைக் காலத்தில் பிரதமராக பொறுப்பேற்றிருந்தாலும் அக்காலக்கட்டம் முழுவதும் நிறைவான சேவையாற்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பையும் அளித்த துன் அப்துல்லா அஹ்மட் படாவி மலேசியர்களின் நினைவில் என்றுமே நிலைத்திருப்பார் என்று முனைவர் என்.எஸ். இராஜேந்திரன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)