கப்பாளா பாத்தாஸ், 15 ஏப்ரல் (பெர்னாமா) - பிரதமராவதற்கு முன்னரே கப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக துன் அப்துல்லா அஹ்மட் படாவியை தாம் நன்கு அறிந்திருந்ததாக,கப்பளா பத்தாஸ் பிபிபி தொகுதி தலைவரான மு.வேலாயுதம் தெரிவித்தார்.
கப்பாளா பத்தாஸ் தொகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டில் தாம் முதல் முறையாக பிபிபி தொகுதிக் கிளையை ஆரம்பிக்கும் போது, அவரின் நட்பு தமக்கு கிடைத்ததாகக் கூறிய வேலாயுதம், அந்த நட்பு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாகக் குறிப்பிட்டார்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் மட்டும் இருந்த துன் படாவியை, இந்திய சமுதாயத்தின் தேவைகளை முன்னிறுத்தி சென்று சந்தித்தால், இல்லை என்று சொல்லாமல் தம்மால் இயன்ற மற்றும் தேவையான உதவிகளை வழங்கக்கூடியவர் என்று புகழாரம் சூட்டிய வேலாயுதம், அவருடன் தாம் பெற்ற மறக்க முடியாத நினைவையும் பகிர்ந்துக் கொண்டார்.
"ஒருமுறை நான் புத்ராஜெயாவில்அவரை சந்திக்க சென்ற வேளையில், அவரின் அறைக் கதவைத் திறந்து உள்ளே செல்லும்போது என்னைப் பார்த்ததும் இனம் புரியாத மகிழ்ச்சி அடைந்த அவர், என்னை அழைத்து அவரின் அருகிலே அமர வைத்து அவர் கையாலே எனக்கு தேநீர் கலந்து கொடுத்தது வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத அனுபவமாகும். அதை இன்று நினைத்தாலும் எனக்கு கண்கலங்கும்," என்று அவர் கூறினார்.
கப்பாளா பத்தாசில் அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களே இன்று அத்தொகுதியை மெருகேற்றியுள்ளன.
மேலும், அத்தொகுதி மக்களின் வாழ்க்கை உருமாற்றத்திற்காக அவர் ஆற்றிய சேவைகளை இம்மண் எப்போதுமே நினைவுக்கூரும் என்றும் பினாங்கு மாநில பிபிபி துணைத் தலைவருமான வேலாயுதம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)