கோலாலம்பூர், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- தாய்லாந்திற்கான அதிகாரப்பூர்வப் பயணம், மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையிலான இருவழி உறவை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் எல்லை மேம்பாட்டு துறைகளை வலுப்படுத்த புதிய வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பிரதமர் பேதோங்டார்ன் ஷினாவத்ராவுடனான சந்திப்பின்போது, மலேசியா மற்றும் தாய்லாந்து மக்களுக்கு நன்மையளிக்கும் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்த அவ்விரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு நாள்கள் பயணத்தின்போது, முக்கியத்துவம் அளிக்கப்பட்ட அம்சங்களில் மியன்மாரின் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பு உட்பட அந்நாட்டின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியதும் அடங்கும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
அதோடு, அனைத்து தரப்பினரின் கருத்துக்களைச் செவிமடுக்க மாநில நிர்வகிப்பு மன்றம், எஸ்.ஏ.சி மியன்மாரின் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம், என்.யு.ஜி மற்றும் ஆசியான் தலைவருக்கான அதிகாரப்பூர்வ ஆலோசனை குழு ஆகியவற்றையும் தாம் சந்தித்ததாக அவர் கூறினார்.
மேலும், ஆசியான் கட்டமைப்பின் கீழ், மியன்மார் மக்களுக்கான நிலையான தீர்வை நோக்கி ஆசியான் தலைவராக மலேசியா தொடர்ந்து பங்களிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், உயர்தர முதலீடுகளைக் கவரும் மலேசியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக அன்வார், தாய்லாந்தின் முதன்மை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.
பேதோங்டார்ன் ஷினாவத்ரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டிற்கு பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)