பொது

தாய்லாந்துக்கு பிரதமர் குறுகிய கால பயணம் மேற்கொள்வார்

14/04/2025 04:56 PM

புத்ராஜெயா, 14 ஏப்ரல் (பெர்னாமா) - தமது சகாவான Paetongtarn Shinawatra மற்றும் ஆசியான் சிறப்பு ஆலோசகர் Thaksin Shinawatra-ஐ சந்திப்பதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாய்லாந்து, பேங்காக்கிற்கு குறுகிய பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

அச்சந்திப்பின்போது, மலேசியா- தாய்லாந்துக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி தாய்லாந்தின் தெற்கு எல்லைப் பகுதியிலும் கிளந்தான் மாநிலத்திலும் உள்ள சுங்கை கோலோக் பிரச்சனையைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அதிபர் சி சின்பிங்கி-இன் வருகைக்குப் பின்னர், ஆசியான் செயற்குழு ஆலோசகர் மற்றும் தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு நடத்த குறுகிய பயணத்திற்காக நான் பாங்காக்கிற்குச் செல்வேன். தெற்கு தாய்லாந்து மற்றும் கிளந்தானில் ஏற்படும் வெள்ளத்திற்கு காரணமான சுங்கை கோலோக் மற்றும் ரந்தாவ் பாஞ்சாங், பாலம் மற்றும் சுங்கை கோலோக் ஆற்றை  தூர்வாரி சுத்தம் செய்வது குறித்தும் விவாதிப்பேன்,'' என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் நிதி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் அதனைக் கூறினார்.

தமது பயணத்தின்போது, பேங்காக்கில் மியன்மார் பிரதமர், மூத்த ஜெனரல் Min Aung Hlaing சந்திக்கவிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

நிலநடுக்கப் பேரிடரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சியே அச்சந்திப்பாகும்.

Aung Hlaing உடனான கலந்துரையாடலின்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)