பொது

மலேசியர்கள் கிடைத்த வசதிகளுக்கு நன்றி பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும்

19/04/2025 04:25 PM

கூச்சிங், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- நிலைத்தன்மையை உருவாக்க அனைத்து மலேசியர்களும் கிடைத்த வசதிகளுக்கு நன்றி பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பலவீனங்களை மேம்படுத்தி நிர்வாகத்தை சரிசெய்ய மக்களின் கருத்துக்களையும் அதிருப்திகளையும் செவிமடுக்கும் நாட்டின் தலைமைத்துவத்தையும் அது உள்ளடக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

''நன்றி செலுத்துவது மிகவும் முக்கியம். சில நேரங்களில் நாம் பலனடையும்போது அதை வழக்கமான ஒன்றாகக் கருதிவிடுகிறோம். சில நேரங்களில் நாம் நன்றி செலுத்த மறந்து விடுகிறோம். கடவுள் வழங்கிய அனுகூலங்களைப் பெற்று விட்டு அதை மறந்தவர்களாக இருக்கக்கூடாது. நாம் மறுத்தும், எப்போதும் கடிந்தும், சினமடைந்தும், நன்றி மறந்தும் இருந்தால், ஆபத்து. நமக்கு வேதனை தரும் தீங்கு நடந்துவிடுமோ என்று அச்சம் கொள்கிறோம்,'' என்றார் அன்வார்.

அதைத் தவிர்த்து, நாட்டின் வளர்சிக்கு பங்களிக்கக்கூடிய மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது கூட்டரசில் உள்ள மாநிலங்களின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய சில மாநிலங்களில் சரவாக்கும் அடங்கும் என்று கூறிய அவர், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார முயற்சிகளுக்கு பல நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)