சிறப்புச் செய்தி

ஏ.ஐ பயன்பாட்டை விழிப்புணர்வோடு மக்களுக்கு உணர்த்தும் SIGHT & SOUND IN LOVE

20/04/2025 07:50 PM

கோலாலம்பூர்,18 ஏப்ரல் (பெர்னாமா) -- ஏ.ஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று மனிதர்களின் நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ஒரு சராசரி மனிதன் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகளின் வாழ்விலும் AI பெரிய திருப்பத்தைக் கொண்டு வரும் என்பதை விழிப்புணர்வோடு மக்களுக்கு உணர்த்தும் வகையில், திரைக்கு வந்துள்ளது உள்நாட்டு திரைப்படமான SIGHT AND SOUND IN LOVE.

ஆண்டாள் திரைப்படம் மூலம் நாட்டில் நன்கு அறியப்பட்ட சந்தோஷ் கேசவன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் கோங், ஃபெலினா உட்பட ஏழு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

பார்வையற்ற ஓர் ஆணுக்கும் வாய் பேச முடியாத ஒரு பெண்ணுக்கும் இடையில் மலரும் காதலையும் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ளும் முறைகளையும் கருவாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சந்தோஷ் தெரிவித்தார்.

தங்களுக்குள் குறைகள் இருந்தாலும் AI உதவியுடன் சராசரி மனிதர்களைப் போன்று இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியும் என்பதை இப்படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்கள் உணர்த்துவதாக அவர் கூறினார்.

''கண் தெரியாத ஒருவரின் வாழ்க்கையிலும் வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கையிலும் ஏ.ஐ எந்த அளவிற்கு ஓர் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது என்பதை உணர்ந்து ஆய்வு செய்து தெரிந்துக் கொண்டோம். தொடர்பில் வரம்புகள் இருந்தாலும் அவர்கள் இன்றைய காலக்கட்டத்தில் எப்படி சாத்தியமானது அதுதான், (பார்வையின் மொழி) SIGHT AND SOUND IN LOVE-இன் கதை,'' என்றார் அவர்.

ஏப்ரல் 17ஆம் தேதி வெளியீடு கண்ட SIGHT AND SOUND IN LOVE திரைப்படம், நாடு தழுவிய அளவில் 25 திரையரங்களில் ஒளிபரப்பப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களில் இத்திரைப்படத்திற்கு மக்களின் ஆதரவும் கருத்துகளும் சிறப்பாக இருந்ததாக கூறிய சந்தோஷ், இது அடுத்தடுத்த படைப்புகளுக்கும் உள்ளூர் கலைஞர்களுக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

''மலேசிய படம், நமது கதை, நமது வரவு செலவிற்கு ஏற்ப ஒரு நல்ல கதை கொடுக்கலாம் என்ற முயற்சிதான் இது. கண்டிப்பாக வெற்றிப் பெற வேண்டும். அடுத்தடுத்த கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.  நிறைய பேர் நல்ல வரவேற்பைத் தருகின்றனர். நல்ல படம் பார்த்த திருப்தி இருப்பதாக சிலர் கூறும்போது  நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,'' என்றார் அவர்.

இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களின் நடிப்பிற்கு இசைப்பாளர் ஜெய்யின் பாடல்களும் பிண்ணனி இசையும் உயிர் கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக பார்வையற்ற நபர்களையும் சந்தித்து, சில அனுபவங்களைக் கற்றுக் கொண்டதாக கதாநாயகர் அருண் குமரன் தெரிவித்தார்.

இன்றையக் காலக்கட்டத்தில் கலைத் துறையில் ஈடுபடுவதற்கு பல இளைஞர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதற்கு கடினமாக உழைப்பை வெளிப்படுத்துவதோடு, நடிப்பு தொடர்பான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் அருண் குமரன்.

''ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போது, அதை நாம் எப்படி புரிந்துக் கொள்கிறோம் என்பதை உணர வேண்டும். அதற்கான உழைப்பை நாம் வழங்க வேண்டும். இது போன்ற ஆர்வமும் திறனும் இருந்தால்தான் சினிமாவில் நிலைத்திருக்க முடியும்.,'' என்றார் அருண்.

Iggy & Janu Talkies நிறுவனம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் அருண் குமரன், ரூபினி கிருஷ்ணண், சர்மினி, ஷாமினி உட்பட மேலும் பல மலேசிய கலைஞர்கள் நடித்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)