ஈப்போ, 24 ஏப்ரல் (பெர்னாமா) - பேராக் மாநிலத்தில் அதிக இந்திய மாணவர்கள் பயிலும் ஈப்போ சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளி, ஈப்போ ஶ்ரீ புத்ரி பெண்கள் இடை நிலைப்பள்ளி, சுங்கை சிப்புட் ஹஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளி மற்றும் சுங்கை சிப்புட் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளிகளில், கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய இந்திய மாணவர்கள் சிறந்த அடைவுநிலையைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
அதிலும், ஈப்போ ஶ்ரீ புத்ரி இடைநிலைப் பள்ளியில் வரலாற்றில் முதன் முறையாக நான்கு மாணவிகள் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மீனாட்சி வேலாயுதம், ஹார்ஷினி குமாரவேல், சுபாஷினி சுந்தர், அனுஷிகா வேல் ஆகிய நால்வரே அப்பள்ளியில் 11ஏ பெற்ற மாணவிகளாவர்.
இப்பள்ளியைச் சேர்ந்த மற்ற மாணவிகளும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு சிறந்த தேர்ச்சியை அடைந்துள்ளதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் இ.மணிராஜா தெரிவித்தார்.
அதேபோன்று, 95 விழுக்காட்டு இந்திய மாணவர்கள் பயிலும் சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியிலும் பலர் சிறந்த அடைவுநிலையைப் பெற்றுள்ள வேளையில், இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் 88.64 விழுக்காடு உயர்வுக் கண்டுள்ளதாகவும் அப்பள்ளியின் முதல்வர் அஹ்மட் ரெஸாவுடின் ஹுசேன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)