பொது

மாலத்தீவு பிரதமருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

28/04/2025 01:05 PM

புத்ராஜெயா, 28 ஏப்ரல் (பெர்னாமா) - மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் மாலத்தீவு அதிபர் டாக்டர் மொஹமட் முய்சுவுக்கு இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. 

காலை மணி 9-க்கு வந்த முய்சுவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்ற பின்னர் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன.

அரச மலேசிய இராணுவப் படையின் முதல் பெட்டாலியனின் மூன்று அதிகாரிகள் உட்பட 102 உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார்.
   
துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹானா இயோ, மக்களவை தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் மற்றும் பொது சேவை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹ்மட் டாஹ்லான் அப்துல் அசிஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவின் அதிபராக முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமரின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு  அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

அன்வாருடன் சந்திப்பு நடத்துவதற்கு முன்னதாக வருகையாளர்கள் புத்தகத்தில் முய்சு கையெழுத்திட்டார்.
 
கடந்தாண்டு, மலேசியா மற்றும் மாலத்தீவின் வர்த்தக அளவு 4.3 விழுக்காடு அல்லது 86 கோடியே 27 லட்சம் ரிங்கிட்டைப் பதிவு செய்துள்ளது.

இது 2023-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, 82 கோடியே 73 லட்சம் ரிங்கிட்டை விட அதிகமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)