பொது

சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்துகளை வெளியிட்ட இருவருக்கு அபராதம்

28/04/2025 04:43 PM

சிப்பாங், 28 ஏப்ரல் (பெர்னாமா) --   மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சமூக வலைத்தளத்தில் ஆபாச கருத்துகளைப் பதிவேற்றம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு, தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதித்து, இன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவ்விருவரும் ஒரு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1998-ஆம் ஆண்டு, தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், செக்‌ஷன் 233 உட்பிரிவு (1)(a) மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 233 உட்பிரிவு (3)-இன் கீழ், 41 வயதான முஹமட் ஷருலாமின் அப்துல்லாவும் 44 வயதான முஹமட் ரசூல் அப்துல் ரசாக்கும் குற்றவாளிகள் என்று நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் முடிவு செய்தார்.

"Haram Sunat Bayi Perempuan di United Kingdom (UK) - Dr Amalina Che Bakri" பற்றிய ஒரு செய்தி தளம் குறித்து, அவ்விருவரும் வேண்டுமென்றே முகநூலில் ஆபாச கருத்துகளை வெளியிட்டதாக, அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தலா 3,000 ரிங்கிட் ஜாமின் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)