பொது

10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு ஐந்து பாக்கெட்களாக உயர்வு

28/04/2025 05:47 PM

செர்டாங், 28 ஏப்ரல் (பெர்னாமா) --   26 ரிங்கிட் விலையிலான 10 கிலோகிராம் உள்ளூர் வெள்ளை அரிசிக்கான கொள்முதல் வரம்பு, ஐந்து பாக்கெட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒருவர் இரு பாக்கெட்டுகள் மட்டுமே வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

பயனீட்டாளர்கள், குறிப்பாக ஏழை குடும்பங்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே, அத்தளர்வு வழங்கப்பட்டதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் சாபூ கூறினார்.

''உள்ளூர் வெள்ளை அரிசியை இரண்டு பாக்கெட்டுகளுக்கு மேல் வாங்கலாம். ஐந்து பாக்கெட்டுகளுக்கு மேல் வாங்க முடியாது. உள்ளூர் வெள்ளை அரிசியைப் பற்றிப் பேசுபவர்கள், இப்போது நிறைய வாங்கலாம். ஏனென்றால், தற்போது சந்தையில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரிசி பாக்கெட்டுகள் சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன'', என்று அவர் கூறினார்.

இன்று, செர்டாங்கில், அமைச்சின் மாதாந்திர சந்திப்பு மற்றும் நோன்புப் பெருநாள் விருந்து உபசரிப்பில் கலந்துக் கொண்டபோது முஹமட் சாபூ அதனைத் தெரிவித்தார்.

ஏப்ரல் நடுப்பகுதி வரையில் நாடு முழுவதும் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனை கடைகள் வழியாக மொத்தம் 31 லட்சத்து 60 ஆயிரம், 10 கிலோகிராம் அரிசி பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதில், சிலாங்கூர், கெடா, பேராக் மற்றும் ஜோகூரில் அதிகமான விநியோகம் பதிவாகியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)