பொது

ஜோகூரில் 90 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 70 கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல்

29/04/2025 05:05 PM

ஜோகூர் பாரு, 29 ஏப்ரல் (பெர்னாமா) - கடந்த வாரம் ஜோகூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 90 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 70 கிலோகிராம் எடைக் கொண்ட பல்வேறு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு, சிங்கப்பூர் பிரஜை ஒருவர் உட்பட ஐவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கி ஐந்து நாள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளில் 22 முதல் 47 வயதுக்கு உட்பட்ட அச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.

ஏப்ரல் 20-ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் சோதனையில், தமது தரப்பு, 22 வயது உள்நாட்டு ஆடவரை கைது செய்ததாக, இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில், கடந்த மார்ச் முதல் அச்சந்தேக நபர், வாடகைக்கு இருந்த 
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, 15 லடசத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 9.35 கிலோகிராம் எக்ஸ்தாசி வகை போதைப் பொருளும் 62 கிராம் கெத்தமின் வகை போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

"சோதனை மற்றும் தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு, இரண்டாவது சோதனை நடத்தப்பட்டது.  அடுக்குமாடி குடியிருப்பில் சந்தேகத்திற்குரிய B1 நபர் ஒரு அறையில் வாடகைக்கு இருந்தது கண்டறியப்பட்டது. அதில் சோதனை நடத்தப்பட்டதில், 9,132 கிராம் எக்ஸ்டசி மற்றும் 56 கிராம் கெத்தமின் நீரும் கண்டெடுக்கப்பட்டது," என்றார் அவர்.

ஏப்ரல், 21-ஆம் தேதி, பத்து பஹாட்டில் உள்ள ஒரு படகுத்துறையில், இரவு மணி 11.30 அளவில் நடத்தப்பட்ட சோதனையில், Ford Ranger ரக வாகனத்தில், 6 லட்சத்து 62 ஆயிரத்து 748 ரிங்கிட் மதிப்பிலான 20.71 கிலோகிராம் ஷாபு வகை போதைப் பொருளும் 13.99 கிராம் எரிமின் 5 ரக மாத்தைரைகளும் கைப்பற்றப்பட்டதாக குமார் தெரிவித்தார். 

வேறொருவர் பேரில் பதிவு செய்யப்பட்ட அவ்வாகனத்தைப் பயன்படுத்தி 36 வயதான அந்த சந்தேக நபர், அண்டை நாட்டிற்கு அப்போதைப் பொருளை விநியோகிக்கவிருந்ததாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)