புத்ராஜெயா, 02 மே (பெர்னாமா) -- இன்று, புத்ராஜெயா பெர்டானா புத்ரா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொசோவாவின் மிக உயரிய ORDER OF INDEPENDENCE விருதை, அந்நாட்டின் அதிபர் டாக்டர் ஜோசா ஒஸ்மானி சத்ரியு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கி கௌரவித்தார்.
நாட்டின் சுதந்திரத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களுக்கு, கொசோவா அரசாங்கத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரம் இந்த விருதாகும்.
இவ்விருது, கொசோவோவின் அந்தஸ்து மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு உண்டான வளர்ச்சிக்கு மலேசியாவின் நிலையான ஆதரவையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உறுதியான அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதாக, இன்று பிரதமர் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், கொசோவோவின் வரலாற்றின் முக்கிய தருணத்தில் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டி அவருக்கும் இவ்விருதை கொசொவோ அரசாங்கம் வழங்கும்.
2008-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி, கொசோவாவின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல்கட்ட நாடுகளில், துன் அப்துல்லாவின் தலைமைத்துவத்தில் இருந்த மலேசியாவும் ஒன்றாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)