பொது

மருந்துகளின் விலையை தெரிந்திருப்பது பயனீட்டாளர்களின் உரிமை - பி.ப.ச

04/05/2025 06:03 PM

கோலாலம்பூர், 04 மே (பெர்னாமா) -- மருந்துகளின் விலையை தெரிந்து கொள்ள வேண்டியது பயனீட்டாளர்களின் உரிமையாகும்.

எனவே, அனைத்து மருத்துவமனை மற்றும் சமூக மருந்தக வளாகங்களும் தங்களது தளங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலைகளை காட்சிப்படுத்தும் செயல்முறை பயனீட்டாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகின்றது.

அனைத்து மருந்துகளும் தெளிவாக விலை அட்டை அல்லது விலைப் பட்டியலுடன் இருக்க வேண்டும் என்று மே முதலாம் தேதி தொடங்கி அமல்படுத்தப்பட்டது.

இதன் வழி, மருத்துகள் விலை மட்டுமின்றி இதர தகவல்களையும் பயனீட்டாளர்கள் அறிந்திருக்க முடியும் என்று அதன் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

''இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு பயனீட்டாளருக்கு தாம் வாங்கும் பொருட்களின் விலை, அதை உற்பத்தி செய்தவர் யார் போன்றவற்றின் விவரம் தெரிந்திருக்க வேண்டும். இது பயனீட்டாளரின் உரிமை. அந்த வகையில், ஒரு நோயாளி ஒரு பயனீட்டாளர் என்ற முறையில் தாம் வாங்கப்போகும் மருந்துகளின் விவரத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு உரிமையாகும். காரணம் அவர் பணம் கொடுத்து வாங்குகின்றார்,'' என்றார் அவர்.

தகவல் பெறுவது, கேட்பது, தேர்வு செய்வது மற்றும் உட்கொள்ளும் பொருட்கள் தொடர்பில் கவனமாக இருப்பது ஆகியவை ஒரு பயனீட்டாளர் உரிமை மட்டுமின்றி தங்களது பாதுகாப்பிற்காக மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதைக் காட்டுகின்றது.

அதே போன்று, இனி மருந்துகளை வாங்கும் பயனீட்டாளர்கள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சமூக மருந்தக வளாகங்கள் சுகாதார அமைச்சின் உத்தரவின் படி செயல்படுவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் எனவும் சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

''நீங்கள் அடுத்த முறை தனியார் மருத்துவமனைகள் அல்லது மருந்து கடைகளுக்குச் சென்றால் அந்த மருந்துகளைப் பற்றிய முழு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது சுகாதார அமைச்சின் வேண்டுகோள். இது பயனீட்டாளர்களுக்கு குறிப்பாக நோயாளிகளுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு வெற்றியாகும். இந்தச் சட்டத்தை  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முழுயாக வரவேற்கிறது,'' என்றார் அவர்.

அனைத்து மருத்துவமனை மற்றும் சமூக மருந்தக வளாகங்களும் தங்களது தளங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலைகளை பயனீட்டாளர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்ற அமலாக்கம் குறித்து பெர்னாமா செய்திகள் தொடர்புக் கொண்டபோது சுப்பாராவ் அவ்வாறு கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)