காஷ்மீர், 07 மே (பெர்னாமா) - இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.
OPERATION சிந்தூர் எனும் பெயரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த தாக்குதலில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 38 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பஹல்கமில், சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவம் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பஹல்கம் தாக்குதல் நிகழ்ந்து இரு வாரங்கள் கடந்தும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
''தாக்குதல்கள் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் நாட்கள் கடந்தும், பாகிஸ்தான் தனது நாட்டிலோ அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலோ உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அது மறுப்புகளையும் குற்றச்சாட்டுகளையும் மட்டுமே செய்துள்ளது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத பகுதிகளை நாங்கள் கண்காணித்ததில், இந்தியா மீது மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருப்பதைக் காட்டியது. இதனால் அதனை முன்கூட்டியே தடுக்கவும் ஒரு கட்டாயம் இருந்தது. உங்களுக்குத் தெரிந்திருக்கும், பதிலடி கொடுக்கவும் முன்கூட்டியே தடுக்கவும் அதே போல் இதுபோன்ற எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுக்கவும் இன்று காலை இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தியது,'' என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இன்று காலை புதிடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி அவ்வாறு கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் மாறாக தீவிரவாதிகள் முகாம்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
இதுவரை ஒன்பது தீவிரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றமான சூழலால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்தியா தனது விமான சேவையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.
மேலும் காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)