வாஷிங்டன் டி,சி. 10 மே (பெர்னாமா) -- ரஷ்யா - உக்ரேன் இடையே நிலவி வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த போரினால், இரு நாட்டு மக்களும் உயிரிழப்பதை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறுகிறார்.
''இரு தரப்பினருக்கும் என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். ரஷ்யா, உக்ரேனிய வீரர்கள் மற்றும் பிற மக்கள் உட்பட வாரத்திற்கு 5,000 வீரர்களை இழந்து வருகிறோம். இந்த முட்டாள்தனமான போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். அதுதான் அவர்கள் ( ரஷ்யா & உக்ரேன்) இருவருக்கும் எனது செய்தி,'' என்றார் அவர்.
உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியும், அமெரிக்க அதிபரும் போர் தொடர்பாக பயனுள்ள உரையாடலைப் பகிர்ந்து கொண்டதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதை குறித்து டிரம்ப் அவ்வாறு கூறினார்.
போர்க்களத்தின் அண்மைய நிலவரம் குறித்து டிரம்பிற்கு விளக்கியதாகவும், உக்ரேன் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் செலன்ஸ்கி நேற்று தெரிவித்திருந்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]