கோலாலம்பூர், 10 மே (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, மலேசியாவில் இணைய மோசடிகள் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதனால், மிக அதிகமான நிதி இழப்புகள் பதிவு செய்யப்படுவதாக அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்-இன் தரவுகள் காட்டுகின்றன.
இவ்வாண்டு தொடங்கி பிப்ரவரி மாதம் மட்டுமே, 5,153 வணிக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட 26 விழுக்காடு அதிகமாகும் என்றும் பி.டி.ஆர்.எம் கூறுகிறது.
நாட்டில் நிகழும் இணைய மோசடிகளில், தொலைப்பேசியில் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளிலேயே அதிகமானோர் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றார் வழக்கறிஞர் சகுந்தலா நாராயணசாமி.
தொலைபேசி அழைப்பிலோ அல்லது குறுஞ்செய்தி வடிவிலோ இந்த மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விவரித்தார்.
''ஒரு தொலைபேசி அழைப்பு வரும் போது அவர்கள் (மோசடி செய்பவர்கள்) அதிகாரத்தில் உள்ளது போல் பேசுவார்கள். உதாரணத்திற்கு நான் இந்த துறையில் இருந்து அழைக்கின்றேன். நீங்கள் இக்காட்டான நிலையில் மாட்டிக் கொண்டீர்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மோசடி செய்பவர்கள் பேசலாம்,'' என்று அவர் விளக்கினார்.
அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து அழைப்பதாகக் கூறியும் மோசடிகளில் சிக்கவைக்க வலை விரிக்கப்படுவதாக சகுந்தலா குறிப்பிட்டார்.
தொலைப்பேசி மோசடிகளைத் தவிர்த்து, இணையம் வழி காதல் மோசடிகளும் நாட்டில் அதிகமாக நிகழ்வதாக அவர் கூறினார்.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மோசடியில் பாதிக்கப்பட்டால், நிதாதனத்தை கடைபிடித்து போலீஸ் அல்லது தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
''பதற்றம் இல்லாமல் நிதானமாக இருந்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். பண மோசடியாக இருந்தால் தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்,'' என்று அவர் ஆலோசனை கூறினார்.
அண்மையில் பெர்னாமா செய்திகள் தயாரிப்பில் ஒளியேறிய பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, சகுந்தலா அந்த தகவல்களை வழங்கினார்.
பார்வை நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமை காலை மணி 11.30-க்கு ஒளியேறுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)