கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- தற்காலிக வேலை அட்டைகள் மற்றும் வேலைவாய்ப்பு அட்டைகளை வைத்திருக்கும் மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாதம் தொடங்கி, ஊழியர் சேமநிதி வாரியம், KWSP தானியங்கி முறையிலான பதிவை செயல்படுத்தவுள்ளது.
பதிவு செயல்முறையை எளிதாக்குவதையும், KWSP அலுவலகத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய அவசியத்தைத் தவிர்ப்பதையும் இப்புதிய நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவ்வாரியம் தெரிவித்தது.
இந்நடவடிக்கை, முதலாளிகள் தங்கள் பணியாளர் விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் i-Akaun கீழ் உள்ள Majikan பகுதியில் சரிபார்க்கும் செயல்முறையை விரைவுப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இதர பணி அனுமதி அட்டைகளை வைத்திருப்பவர்கள் பதிவு செயல்முறை மற்றும் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை நாடு முழுவதும் உள்ள KWSP அலுவலகங்களில் வழக்கம் போல் செய்துக்கொள்ளலாம்.
கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்களின் மூலம், இப்புதிய செயல்முறை குறித்து முதலாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவு செய்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட KWSP எண்ணைப் பயன்படுத்தி பங்களிப்புகளைச் செய்யலாம் என்று அது கூறியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]