கோலாலம்பூர், அக்டோபர் 09 (பெர்னாமா) -- வரம்பற்ற மாதாந்திர பயண அட்டை முயற்சியைத் தொடரவும், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஷா ஆலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை இணைக்கும் எல்.ஆர்.டி 3 எனப்படும் மூன்றாவது இலகு ரயில் சேவை திட்டத்திற்கு ஆதரவை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிராசாரானா மலேசியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.
அனைவருக்கும் மலிவு விலையில் போக்குவரத்து சேவையை வழங்குவதன் வழி, மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதில், வரம்பற்ற மாதாந்திர பயண அட்டை திட்டம் பயனளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதிலும், லட்சக்கணக்கான பயணிகளின் தினசரி போக்குவரத்தை எளிதாக்குவதிலும், நிறைவடையும் தருவாயில் உள்ள எல்.ஆர்.டி 3 திட்டத்திற்கு அரசாங்கம் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவு மிக முக்கியமானது என்று Prasarana நம்புகிறது.
இதனிடையே, சபா மற்றும் சரவாக்கில் உள்ள விமான நிலையங்களின் ஓடுபாதைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மலேசிய போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் வான் மஸ்லினா வான் முஹமாட் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டில், சபாவில் உள்ள தவாவ் விமான நிலையத்தையும், சரவாக்கில் உள்ள மிரி விமான நிலையத்தையும் மேம்படுத்த அரசாங்கம் 25 கோடியே 30 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்களின் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்துவதற்காகவும் அரசாங்கம் அடுத்தாண்டு நிதி ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் வான் மஸ்லினா கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)