பொது

ஜி.எஸ்.எஃப்-இல் பங்கேற்ற மலேசிய தன்னார்வலர்களுக்குப் பிரதமர் பாராட்டு

09/10/2025 05:12 PM

கோலாலம்பூர், அக்டோபர் 09 (பெர்னாமா) -- காசாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சென்ற குளோபல் சுமுட் ஃப்ளோதிலா, ஜி.எஸ்.எஃப் (GLOBAL SUMUD FLOTILA, GSF) பயணத்தில் பங்கேற்ற மலேசியாவின் 23 தன்னார்வலர்களின் போராட்டம் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்தார்.

காசா மக்களுக்கு உதவி வழங்குவதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் மலேசியர்கள் ஒன்றிணைந்து பெரும் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட செயல், தேசிய வரலாற்றை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.

அதிக ஆபத்துகளை எதிர்கொண்ட போதிலும், மனிதாபிமான நடவடிக்கைக்காக தங்கள் குடும்பங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்த  ஜி.எஸ்.எஃப் பங்கேற்பாளர்களின் மனப்பான்மை மற்றும் தைரியத்தையும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டினார்.

''இது பாரிசிக்குச் செல்லும் பயணம் அல்ல. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுக்குச் செல்லும் பயணம். ஒரு தந்தையாக, அவர்கள் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து செல்வதை நான் அறிவேன். அவர்கள் கடினத்தை எதிர்கொண்டால் எனக்கும் கடினம். ஆனால் இவர்கள் வரலாற்றை உருவாக்குவதால் நான் அவர்களை மதிக்கிறேன். போராடத் தயாராக இருக்கும் குழந்தைகள்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு, புக்கிட் ஜாலில் அக்சியாட்டா அரங்கில் நடைபெற்ற காசாவுடன் ஒற்றுமை பேரணியில் அன்வார் உரையாற்றினார்.

மலேசியர்கள் உட்படப் பங்கேற்பாளர்களின் துணிச்சல், பாலஸ்தீனப் போராட்டம் தொடர்பான உலக மக்களின் உறுதிப்பாடு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக மாறியபோது, ​​ ஜி.எஸ்.எஃப் பயணம் உலக கவனத்தைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, Freedom Flotilla Coalition மற்றும் Thousand Madleens To Gaza மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒன்பது மலேசியர்களை மீண்டும் தாயகம் அனுப்பி வைப்பதில் துருக்கி உதவும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

''ஒன்பது பேரும் இன்னும் இஸ்ரேலிய காவலில் உள்ளனர். வெளியுறவு அமைச்சர் மாட் ஹாசனிடம் என் நண்பர் தையிப் எர்டோகன், துருக்கி ஒன்பது பேருக்கும் தொடர்ந்து உதவும் என்ற ஒரு செய்தியைக் கூறியுள்ளார்,'' என்று அவர் கூறினார்.

மேலும், மனிதாபிமான பணியில் பங்கேற்ற 23 மலேசியவர்களைத் நாட்டிற்கு அழைத்து வருவதில் உதவிய நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)