கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- தொழிலாளர்களைத் திறமையான முறையில் வழிநடத்தும் உணவக உரிமையாளர்கள், அதிகரித்து வரும் இலக்கவியல் நுட்பங்கள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிர்வகிப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றனர்.
எனவே, உணவக உரிமையாளர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கும் நோக்கில், வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம், பிரிமாஸ் எதிர்பார்ப்பதாக, அதன் தலைவர் ஜே.கோவிந்தசாமி தெரிவித்தார்.
''உணவக தொழிலாளர்களுக்கு மட்டும் பயிற்சிகள் வழங்கினால் போதாது மாறாக, அதன் உரிமையாளர்களுக்கும் போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும். எனவே, அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்க நிதி அமைச்சின் கீழ் அவர்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதாவது, நிதி அமைச்சின் கீழ் உணவக உரிமையாளர்களுக்குப் போதிய பயிற்சிகளை வழங்க மானியம் வழங்க வேண்டும்'', என்றார் அவர்.
நாட்டில் செயல்படும் ஒவ்வோர் உணவகமும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பாக கருதப்படுவதால், தற்போது அதில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறை, அந்நிய தொழிலாளர்களின் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கோரிக்கையையும் தாம் அரசாங்கத்திடம் முன்வைப்பதாக, கோவிந்தசாமி கூறினார்.
அதோடு, தற்போது அதிகரித்து வரும் விலைவாசி பிரச்சனைகள், உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலையிலும் அதிகரிப்பை ஏற்படுத்துவதால், அது குறித்து விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தாம் திட்டமிட்டிருப்பதாக, அவர் தெரிவித்தார்.
''அதாவது, உணவின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று உணவக உரிமையாளர்களுக்கு விருப்பமில்லை. ஆனால், கட்டப்படுத்த முடியாது நிலை ஏற்படும் போது விலையை அதிகரிப்பதற்கான சூழ்நிலை ஏற்படுகின்றது. உணவகங்களில் உட்கொள்ளும் மக்கள் பெரும்பான்மையானோர் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. எங்களுக்கும் தரமான உணவை வழங்க முடியாத சூழல் நிலவுகின்றது'', என்று ஜே.கோவிந்தசாமி தெரிவித்தார்.
இதனிடையே, உணவக துறையில் இந்திய இளைஞர்களின் ஈடுபாடு குறித்து லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா ராமலிங்கம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
''இளைஞர்கள், குறிப்பாக மலேசிய இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு பிரகாசமான தொழில். ஆனால், இது நீண்ட அவகாசம் கொண்ட ஒரு தொழில். நீண்ட நேரம் இதில் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான், இத்துறையில் இளைஞர்களை ஈர்க்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது'', என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் 25-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உணவக உரிமையாளர்கள், உறுப்பினர்கள், தொழில்முனைவோர் என்று சுமார் 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)