பொது

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்ட மலேசிய தன்னார்வலர்கள் நாடு திரும்பினர்

08/10/2025 04:26 PM

சிப்பாங், 08 அக்டோபர் (பெர்னாமா) - காசாவிற்கான GLOBAL SUMUD FLOTILLA மனிதாபிமான பயணத்தில் பங்கேற்ற 23 மலேசிய தன்னார்வலர்கள் நேற்றிரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் முதலாம் முனையத்தில் பாதுகாப்பாக வந்தடைந்தனர்.

இரவு மணி 10.07 அளவில் EK 342 எமிரேட்ஸ் விமானம் வழியாக தரையிறங்கிய அவர்களைக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

பாதுகாப்பாக நாடு திரும்பிய அவர்களை வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்சில், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் மற்றும் GLOBAL SUMUD NUSANTARA செயல்பாட்டு மைய பிரதிநிதிகளும் வரவேற்றனர்.   

கே.எல்.ஐ.ஏ நுழைவாயிலில் இருந்து வெளியேறிய SUMUD NUSANTARA  தன்னார்வலர்கள் கண்ணீருடன் செய்தியாளர்கள் முன்னர் தங்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்தினர். 

அதோடு, நேற்று மாலை மணி 6 முதலே காத்திருந்த குடும்பத்தினர் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆகிய சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றதால் அந்தச் சூழல் இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக மாறியது.

23 மலேசிய ஆர்வலர்களை  மீண்டும் அழைத்து வருவது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அரசாங்கத்தின் எல்லை தாண்டிய அரச தந்திர உறவை நிரூபித்துள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)