உலகம்

நச்சு கலந்த இருமல் மருந்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து

09/10/2025 06:02 PM

தமிழ்நாடு, அக்டோபர் 09 (பெர்னாமா) -- நச்சு கலந்த இருமல் மருந்தை உட்கொண்டு ஐந்து வயதுக்குட்பட்ட 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கிடங்குகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதில், நச்சு கலந்திருக்கும்  வணிக முத்திரை கொண்ட மேலும் இரண்டு  இருமல் மருந்தைத் தவிர்க்குமாறு இந்திய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

அதேவேளையில், நச்சு கலந்த அந்த இருமல் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக 
அதிகாரிகள் கூறியுள்ளனர். 

கொல்டிஃப் (Coldrif) என்ற அந்த இருமல் மருந்தை  ஒரு மாதமாக உட்கொண்டதால், இந்தியாவில் 17 குழந்தைகள் உயிரிழந்தது, கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதும், அந்த மருந்து தடைசெய்யப்பட்டது.

அதில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 500 மடங்கு அதிகமாக அதாவது உலக சுகாதார நிறுவனமும் இந்திய அதிகாரிகளும் அங்கீகரித்த ஒரு விழுக்காட்டைக் காட்டிலும் 46 விழுக்காட்டிற்கும் அதிகமாக diethylene glycol நச்சு இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ரெஸ்பிஃபெரெஷ் Respifresh மற்றும் ரிலைஃப் RELIFE என்ற இருமல் மருந்துகளிலும் நச்சு கலந்திருப்பதாக குஜராத் உட்பட பிற மாநிலங்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது, குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், இதனால் சிறுநீரக செயலிழப்பு, நரம்பியல் கோளாறுகள் மட்டுமின்றி மரண அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)