பொது

ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அலவன்ஸ் மறு ஆய்விற்கு கல்வி அமைச்சு வரவேற்பு

08/10/2025 05:00 PM

கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) -- தற்போது முறையே 200 மற்றும் 300 ரிங்கிட்டாக இருக்கும் ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அலவன்ஸ் குறித்து மறுஆய்வு செய்வது தொடர்பில், எந்தவொரு அணுகுமுறை அல்லது புதுப்பிப்பை கல்வி அமைச்சு வரவேற்கின்றது.

ஏனெனில், தேசிய கல்வித் தலைவர் தொழில்முறை தகுதி திட்டத்தில் பங்கேற்பதில், ஆசிரியர்களிடையே ஆர்வத்தைத் தடுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக தற்போதைய அலவன்ஸ் விகிதம் பார்க்கப்படுவதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

''இருந்தபோதிலும் இந்த அலவன்ஸ் தொகை, விநியோகிப்பு மற்றும் ஏற்கனவே உள்ள திட்டத்தின் அடிப்படையில் பொது சேவை துறையால் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுவதை பாகான் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினரிடம் நான் தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமின்றி அவ்விரு அலவன்ஸ் வழங்கலும் இன்னும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன,'' என்றார் அவர்.

கல்வி அமைச்சின் முன்னேற்பாடு தொடர்பில், பாடநெறிக்கேற்ப ஆசிரியர்களை ஈர்க்கும் வகையில் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ் அல்லது ஊக்கத்தொகைகளை மதிப்பாய்வு செய்வது குறித்து பாகாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இட்ரிஸ் அஹ்மட், இன்று மக்களவையில் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு வோங் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)