கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் தேதியில் இருந்து 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான, மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவின் மேற்பார்வை மன்றம் மற்றும் நிர்வாக வாரியத்தின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இன்று வழங்கினார்.
பெர்னாமா மேற்பார்வை மன்றத்தின் புதிய தலைவராக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்ஹார் அப்துல் ஹமிட் நியமிக்கப்பட்டார்.
அதே வேளையில், பெர்னாமா தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சூன் வை, பெர்னாமா நிர்வாக வாரியத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மேற்பார்வை மன்றத்தின் நான்கு உறுப்பினர்களும், பெர்னாமா நிர்வாக வாரியத்தின் 20 உறுப்பினர்களும் இன்று தங்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அவர்களின் நியமனத்திற்கு, மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங், பெர்னமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின், தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துறைராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வை மன்றம், பெர்னாமா நிறுவனம் அதன் நோக்கங்கள் மற்றும் பங்கை நிறைவேற்றுவதில் எப்போதும் 1967-ஆம் ஆண்டு பெர்னாமா சட்டத்தின் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)