கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) - அடுத்தாண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையில் 13-வது மலேசியா திட்டம் RMK13-ஐ உட்படுத்தி நாடு பயணிக்கும் என்பதால் பொருளாதார அடிப்படையிலான வளர்ச்சி மிகவும் அவசியமானது.
நாடு தழுவிய அளவிலான வணிகக் கணக்கெடுப்பில், 98 விழுக்காட்டினர் பிகேஎஸ் எனப்படும் குறு, சிறு, நடுத்தர வர்த்தகர்கள் என்பதால், அவர்களின் வியாபாரத்தை தற்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கு அரசாங்கம் ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யும் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களின் வணிக தேவை அறிந்து கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம், KLSICCI கேட்டுக் கொண்டது.
மடானி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றிய மூன்று ஆண்டுகளில் வணிகர்களைப் பொருத்தமட்டில், இன அடிப்படையிலின்றி, தேவைகளின் அடிப்படையிலேயே அதிகமாக உதவிகளைச் செய்து வருகிறது.
மேலும், ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு குறு, சிறு, நடுத்தர வணிகர்களின் பங்களிப்பு 38 விழுக்காடு என்பதால், அவர்களை முறையாக பாதுகாக்கும் கடப்பாட்டையும் நடப்பு அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் என்று KLSICCI-இன் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.
''தற்போதைய காலகட்டத்தில் எஸ்எம்மி கோர்ப் மூலமாக சிறு, நடுத்தர வணிகர்களுக்கு வணிக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அந்த மானனியத்திற்கான ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. ஏனெஇல் வணிக பதிவிற்காக 12 லட்சம் இந்தியர்கள் பதிவு செய்துள்ள வேளையில், அதில் எழுபது விழுக்காட்டினருக்கு ஏழு லட்சத்திற்கும் மேலாக வருமானம் கிடைக்கிறது. ஆனால் வழங்கப்படும் அந்த ஒதுக்கீடு குறைவானவர்களையே சென்று சேர்வதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதை அரசாங்கம் முடிந்தவரை உயர்த்தினால் நல்லது,'' என்று அவர் கூறினார்.
மேலும், எஸ்.எம்.மி கோட்ர்ப், எஸ்.எம்.மி பேங்க், தெக்கூன் உள்ளிட்ட பல வங்கிகள் மூலமாக நான்காயிரம் கோடி ரிங்கிட்டிற்கும் மேலாக வணிகர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருவது வரவேற்புக்குரியது என்றாலும், அதற்கான விண்ணப்பத்தை அரசாங்கம் சற்று தளர்த்தினால் அனைத்து குறு, சிறு, நடுத்தர வணிகர்களும் அத்திட்டத்தில் பலன் பெறுவார்கள் என்று நிவாஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதேவேளையில், நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப வர்த்தக முறை, தயாரிப்பு மாற்றம் ஆகியவற்றில் இந்திய வணிகர்களும் கூடுதல் கவனம் செலுத்தினால், ஆண்டுக்கு ஆண்டு வர்த்தகத்தில் வளர்ச்சி காண்பதுடன், அரசாங்கத்தின் அனுகூலங்களையும் முறையாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் ஆலோசனைக் கூறினார்.
இதனிடையே, வணிக ரீதியில் இந்திய வர்த்தகர்களுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம் தயாராக உள்ளது.
ஆலோசனை தேவைப்படுவோர் 03-26931033 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதோடு KLSICCI என்ற முகநூலை நாடினாலும் உடனுக்குடன் பதில் வழங்கப்படும் என்று நிவாஸ் தெரிவித்தார்.
கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில் இன்று நடைபெற்ற சிறப்பு நேர்க்காணலின் போது அவர் அத்தகவல்களை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)