பொது

4 கோடியே 35 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் அழிக்கப்படும்

08/10/2025 05:39 PM

ஜோகூர்பாரு, 08 அக்டோபர் (பெர்னாமா) -  4 கோடியே 35 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் மற்றும் அதனை தயாரிக்கும் உபகரணங்களை ஜோகூர் மாநில போலீஸ் அழிக்கவிருக்கிறது.

அவற்றில், 651 கிலோகிராம் எடைக் கொண்ட திடப் போதைப் பொருளும் 12 ஆயிரத்து 243.02 லீட்டர் திரவப் போதைப் பொருளும் அடங்கும்.

D207 பிரிவின் தேசிய போலீஸ் தலைவரின் நிரந்தர உத்தரவுக்கு இணங்க அதனை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்தும் ரஹ்மான் அர்ஸாட் கூறினார்.  
 
"அப்புறப்படுத்தப்பட்ட போதைப் பொருள், திறக்கப்பட்ட 4,528 விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 2000 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகள் நிறைவடைந்து விட்டன," என்று டத்தோ அப்தும் ரஹ்மான் அர்ஸாட் தெரிவித்தார்.

1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39B, செக்‌ஷன் 39A 2, செக்‌ஷன் 39A 1, செக்‌ஷன் 6, செக்‌ஷன் 12(2) மற்றும் 1952-ஆம் ஆண்டு நச்சு சட்டம் செக்‌ஷன் 30(3) ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டிருந்தன.

அழிக்கப்பட்ட அந்த போதைப் பொருள் சந்தையில் விநியோகிக்கப்பட்டால் சுமார் 13 லட்சத்து 90 ஆயிரம் போதைப் பித்தர்கள் பாதிக்கப்படுவர் என்றும் அப்துல் ரஹ்மான் விவரித்தார்.

சிலாங்கூர், தெலுக் பங்ளிமா காராங்கில் அவற்றை அழிக்கும் பணியைக் கழிவு நிர்வகிப்பு நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)