கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) - மலேசியாவைச் சேர்ந்த 38 வயதான பி. பன்னீர் செல்வத்திற்கு இன்று சிங்கப்பூரில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை அக்குடியரசின் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்தியது.
மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய அவரது மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
முன்னதாகச் சட்டத்தின் கீழ், பன்னீர் செல்வத்திற்கு முழு உரிமை வழங்கப்பட்டது.
விசாரணை மற்றும் மேல்முறையீட்டின் போது, சட்ட ஆலோசகர்களும் அவரைப் பிரதிநிதித்திருந்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி சிங்கப்பூருக்கு 51.84 கிராமிற்கும் குறைவான diamorphine வகை போதைப் பொருளை இறக்குமதி செய்ததற்காக 2017-ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் பன்னீர் செல்வத்தை குற்றவாளி என உறுதிபடுத்தி கட்டாய மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
போதைப் பொருள் துஷ்பிரயோகச் சட்டம் MDA-இன் கீழ், 15 கிராமுக்கு மேல் diamorphine வகை போதைப் பொருள் கடத்தப்பட்டதால், மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தமக்கு வழங்கப்பட்ட தண்டனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்த வேளையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி அவரின் மேல்முறையீட்டை, மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதையடுத்து இரண்டு முறை மரண தண்டனையை ஒத்தி வைப்பதற்கான உத்தரவு அவருக்கு வழங்கப்பட்டது.
முதலாவதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டத்தை எதிர்த்து அவர் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
அதையடுத்து, மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான மேல்முறையீட்டுக்குப் பிந்தைய விண்ணப்பத்தின் மீது முடிவு, நிலுவையில் இருந்த நிலையில், இவ்வாண்டு பிப்ரவரியில் இரண்டாவது உத்தரவு வழங்கப்பட்டு, பின்னர் அது செப்டம்பர் 5-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.
முதல் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 11 பிந்தைய மேல்முறையீட்டிற்குப் பன்னீர் செல்வம் விண்ணப்பம் செய்திருந்தார்.
அதில் ஏழு விண்ணப்பங்கள், மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் மற்ற கைதிகளுடன் செய்யப்பட்ட கூட்டு விண்ணப்பங்களாகும்.
இதனிடையே, செப்டம்பர் 25-ஆம் தேதி கே. தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு வார காலத்திற்குள் சிங்கப்பூரில் மற்றொரு மலேசியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மேலும் இரு மலேசியர்களுக்கு இவ்வாண்டு ஜூலை மாதத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)