கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) -- Francais எனப்படும் உரிம வணிகத் துறையில் இந்திய சமுதாயத்தின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் 'சூரியன்' எனும் திட்டத்தை Perbadanan Nasional நிறுவனம், பெர்னாஸ் (Pernas) அறிமுகப்படுத்தியுள்ளது.
பயிற்சி, சுழல் நிதி, கடன் வசதி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் என சுமார் 5 கோடியே 45 லட்சம் ரிங்கிட்டை வழங்கும் இத்திட்டத்தின் மூலம் 1,000 பேர் பயனடைவார்கள் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
''இத்திட்டத்தில் 1,000 பேரில் 500 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்படும். தொடக்க ஊதியம் 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,800 ரிங்கிட் வரை வழங்கப்படும். அதோடு, உரிம வணிகமும் உள்ளது. உதாரணமாக, நீங்கள் 10 கடை வைத்திருந்து, அதை விரிவுப்படுத்த விரும்பினால், அதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்கவும், அந்த உரிம வணிகத்தை பதிவு செய்யவும் உதவிகள் வழங்கப்படும்,'' என்றார் அவர்.
இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதோடு, பெர்னாஸ் அலுவலகத்தில், அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தைக் கொண்டு இணையம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம், அடுத்த ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 400 சிறு தொழில்முனைவோர் சிறு நிதியுதவியைப் பெறவுள்ள வேளையில், 100 Francais அல்லது உரிமம் கொண்டுள்ளவர்கள் அதற்கான நிதி வசதியையும் பெறவிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)