புத்ராஜெயா, 10 அக்டோபர் (பெர்னாமா) -- கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கல்வி கழகங்களிலும் ஐ.எல்.ஐ (ILI) எனப்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் விரிவான தொடர் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று அவ்வமைச்சு உறுதியளித்துள்ளது.
அக்கல்வி கழகங்களின் நிர்வாகத் தரப்பு நிலைமையை முறையாகவும் திறம்படவும் நிர்வகிக்கும் பொருட்டு ஐ.எல்.ஐ பரவலை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்து கல்வி கழகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் அசாம் அஹ்மாட் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி மாநில கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களின் மூலம் இந்த அறிவிப்பு கடிதம் விநியோகிக்கப்பட்டதாக டாக்டர் முஹமட் அசாம் கூறினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி கழக உறுப்பினர்களின் சுகாதாரமும் நல்வாழ்வும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் ஐ.எல்.ஐ பரவலை கண்காணித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]