கூச்சிங், 10 அக்டோபர் (பெர்னாமா) -- சரவாக், சந்துபோங், கம்போங் ரம்பாங்கியில் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று வயது சிறுமி மரணமடைந்தது தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் 32 வயதுடைய ஆடவர் ஒருவர் ஏழு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கூச்சிங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் துணைப் பதிவாளர் அய்டா மொந்தோங் இன்று அத்தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவம் குறித்து, 52 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவரிடமிருந்து கடந்த புதன்கிழமை புகார் பெறப்பட்டதாக கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அலெக்சன் நாகா சாபு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தமது நண்பரின் மகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மணி 9.45 அளவில் உயிரிழந்ததாக அந்நண்பர் தெரிவித்ததை புகாரளித்தவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
மரணமடையும் வரை அச்சிறுமி துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் தொடர்பில் ஆறு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள அச்சந்தேக நபர் நேற்று காலை மணி 11-க்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]