கிள்ளான், 12 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்றிரவு, சிலாங்கூர், கிள்ளான், புக்கிட் ராஜா டோல் சாவடியின் 0.5-வது கிலோமீட்டாரில் நடத்தப்பட்ட ஓப்ஸ் Bersepadu சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட சுமார் 400 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் உட்பட சிலாங்கூர் மாநில போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை, ஜே.எஸ்.பி.டி-ஐ சேர்ந்த 100 அதிகாரிகளும், தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம், ஏ.ஏ.டி.கே-வின் பத்து உறுப்பினர்களும் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக, புக்கிட் அமான் ஜே.எஸ்.பி.டி-இன் துணை இயக்குநர் டி.சி.பி முஹமட் ரொஸி ஜிடின் தெரிவித்தார்.
அப்பகுதியில் ஆபத்தான சாகசங்களுடன் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாத 15 வயது இளைஞர் ஒருவர் ஈடுபட்டது அடையாளம் காணப்பட்ட வேளையில், ஆபத்தான நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி நெடுஞ்சாலை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளோட்டிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
''இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நாங்கள் ஜே.எஸ்.பி.டி தரப்பு தயங்க மாட்டோம்,'' என்றார் அவர்.
தங்கள் பிள்ளைகள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் சட்டவிரோத பந்தயங்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]