ஜோகூர், 14 அக்டோபர் (பெர்னாமா)-- நேற்று பாகோ பஞ்சர் ஆற்றில் மூழ்கிய காரின் ஓட்டுநரான ஓர் ஆணின் சடலத்தை பின்னிரவு மணி 1.01-க்கு தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
புரோட்டான் சாகா காரில் கண்டெடுக்கப்பட்ட அவ்வாடவரின் உடல் கிரேன் மூலமாக வெளியேற்றப்பட்டது.
சுமார் 11 மணிநேர தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், அவ்வாற்றில் சுமார் 15 மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருந்த காரும் அந்தச் சடலமும் வெளியேற்றப்பட்டதாக பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைப் பிரிவு தளபதியும் தீயணைப்பு மூத்த அதிகாரியுமான நோர் அல்ஃபதார் ஓமர் தெரிவித்தார்.
மூவார் மற்றும் ஸ்கூடாயை சேர்ந்த மீட்புக் குழுவினரால் வெளியேற்றப்பட்ட மரணமடைந்தவர், 47 வயதுடைய மட் ஹுஸ்னி மஹ்மூத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றிரவு மணி 10.21 அளவில், சுமார் ஐம்பது மீட்டர் தொலைவில், 15 மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல் நடவடிக்கைக்காக மீட்கப்பட்ட சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)