ஷா ஆலம், 15 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 வயது மாணவன், பாதிக்கப்பட்ட மாணவி மீது விருப்பம் கொண்டிருந்தது விசாரணையின் வழி தெரிய வந்துள்ளது.
எனினும், அவர்கள் தொடர்பு கொண்டதோ அல்லது எந்த உறவும் கொண்டிருந்ததோ இல்லை என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
உணர்ச்சிவசப்பட்டும், சமூக வலைத்தளத்தின் தாக்கத்தினாலும், சந்தேக நபர் இச்செயலில் ஈடுபட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.
''சம்பவத்திற்கு முன்பு சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் எந்த உறவோ அல்லது தொடர்போ இல்லை என்பதும் தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. சந்தேக நபரின் செயல்களுக்கு உணர்ச்சிவசப்பட்டதும், சமூக ஊடகங்களின் தாக்கமும் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.
இன்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் ஷசெலி அவ்வாறு கூறினார்.
சந்தேக நபருக்கு, பள்ளியில் கட்டொழுங்கு பிரச்சனை தொடர்பான பதிவு எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட ஷசெலி, அவர் பாதிக்கப்பட்டவரை கழிப்பறை வரை பின் தொடர்ந்து சென்று, கத்தியால் குத்தியதாகக் கூறினார்.
இதனிடையே, சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில், மூன்று ஆயுதங்களை போலீசார் கண்டெடுத்ததாக ஷசெலி தெரிவித்தார்.
அம்மாணவியின் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
''இணையம் வாயிலாக அவை அனைத்தும் வாங்கப்பட்டது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது,'' என்று அவர் மேலும் கூறினார்.
அம்மாணவனை கைது செய்தபோது, அவனிடம் இருந்து மீட்கப்பட்ட தாளில், 'இவ்வுலகம் போலியானது, நான் வெற்றி பெற்று விட்டேன்' என்று எழுதப்பட்டிருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வழக்கு தொடர்பில், மாணவர், ஆசிரியர், குடும்ப உறுப்பினர், உளவியல் ரீதியில் பள்ளியில் ஆலோசனை வழங்கும் பிரதிநிதிகள் உட்பட இதுவரை 57 சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சிலாங்கூர், பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்தில், மரணமடைந்த அம்மாணவி, இதர மாணவர்கள் மற்றும் சம்பவம் நிகழ்ந்த இடம் உட்பட, இச்சம்பவம் தொடர்பிலான எந்தவோர் உள்ளடக்கத்தையும் பகிரவோ, பதிவேற்றம் செய்யவோ வேண்டாம் என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு, பதிவேற்றம் செய்த அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்குமாறு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவ்வாணையம் வலியுறுத்தியது.
அதோடு, போலீஸ் விசாரணைக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தாத வகையிலும் அவ்வாறு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற உள்ளடக்கங்களைப் பகிர்பவர்கள் மீது, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், சட்டம் 588 செக்ஷன் 233-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்சிஎம்சி எச்சரித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)