பொது

சிறுவர்களின் கண்ணோட்டத்தில் தீபாவளி கொண்டாட்டம்

17/10/2025 07:53 PM

பத்து மலை, 17 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி கொண்டாட்டம் என்றாலே அது சிறுவர்களுக்குத்தான்.

இந்நாளில், அவர்கள் புத்தாடை உடுத்தி, மத்தாப்பு கொழுத்தி, பெற்றோரின் அன்புப் பரிசுகளைப் பெற்று எதையும் எதிர்ப்பார்க்காத புன்னகையோடு, தித்திக்கும் மழழை பேசி, பசுமை மாரா குணத்தில், வண்ண உடை உடுத்திய சிட்டுகளாய் வளம் வருவது குடும்பத்திற்குத் தனி மகிழ்ச்சியைச் சேர்க்கும்.

ஒவ்வோர் ஆண்டும் சிறுவர்கள் ஆர்வமாய் காத்திருக்கும் கொண்டாட்டங்களில் ஒன்று தீபாவளி.

இக்கொண்டாட்டம் தங்களுக்கு இன்பமான பண்டிகையாக இருப்பதைக் காட்டிலும் ஆண்டுதோறும் தங்கள் தாயாருடன் பலகாரங்கள் செய்வது, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது, குடும்பத்தோடு புத்தாடைகள் வாங்கச் செல்வது ஆகியவற்றுக்கு ஆர்வமாகக் காத்திருப்பதாகப் பத்து மலை தமிழ்ப்பள்ளியின் பாலர்ப்பள்ளி மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

"நாங்கள் பாட்டி வீட்டுக்குச் சொன்று அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். பின்பு, அங்கு முறுக்கு சுட்டுவோம். பாட்டி எங்களுக்கு அன்பளிப்பு தருவார்," என்று அமுதினியாழ் சாந்த குமார் கூறினார்.

அவர்கள் சிறு வயது முதல் தங்களின் குடும்ப பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தீபாவளி பண்டிகையை குதூகலமாக கொண்டாடி வரும் வேளையில், நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு பயிலும் சிறுவர்கள், அதன் அர்த்தத்தை நன்குணர்ந்து அர்த்தமுல்ல தீபாவளியை கொண்டாடுவதும் தெரிய வந்தது.

"ராமர், ராவணனை வதம் செய்து சீதையுடன் அயோதிக்கு திரும்பும்போது, அந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய அயோத்தி மக்கள், வீடுகளுக்கு முன்பு தீபங்களை ஏற்றி வைத்தனர்; அதுவே இன்று 'தீபாவளி' என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது," என்று ப்ரதாபன் சுந்தரேசன் கூறினார்.

தீபாவளி பண்டிகை எப்போதும் அனைவருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை.

சில சிறுவர்கள் அதை மாறுப்பட்ட கண்ணோட்டத்தில் காண்பதோடு, மேலும் சிலருக்கு கடந்தகால அழகிய தருணங்களையும் நினைவூட்டுவதைக் காண முடிந்தது.

"என் அப்பாவுடன் கொண்டாடியது எனக்கு இனிய நினைவாக உள்ளது. என் அப்பா இறந்தபோது எனக்கு ஒன்பது வயது. எனக்கு எட்டு வயதாக இருந்த போது, தீபாவளியை அப்பாவின் அம்மா வீட்டில் கொண்டாடினோம். அப்பா கொண்டாடும்போது, மற்றவர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அப்போது, எங்களுக்கு முறுக்கு, பலகாரம் போன்ற பல உணவுகளைத் தருவார்கள்,'' என்று சாய் லட்சுமி பரமேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், "தீபாவளி என்பது எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒரு நாள். அந்த நாளில், மனதுக்குள் இருக்கும் இருள் வெளியேறி மகிழ்ச்சி நிறைந்த நாளாக மாற வேண்டும் என்பதே தீபாவளியின் கருப்பொருள். அதனால், என்னைச் சுற்றி உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நிறைய பலகாரங்கள் செய்து, அதைப் பிறருக்கும் பகிர்ந்து, அவர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதையே என் குடும்பத்தினரும் நானும் கலாச்சாரமாகப் பின்பற்றி வருகிறோம்," என்று ஷிவண்யா முகுந்தன் தெரிவித்தார்.

இதனிடையே, மாணவர்களின் இக்கொண்டாட்ட களிப்பை இரட்டிப்பாக்க பள்ளிகளிலும் மிகப் பெரிய அளவில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சிலாங்கூரில் உள்ள பத்துமலை தமிழ்ப்பள்ளியில் இன்று முன்கூட்டியே தீபாவளி கொண்டாடப்பட்டதோடு 1000 மாணவர்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு மட்டுமல்லாமல், முறுக்கு, உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

இக்கொண்டாட்டத்தின் சிறப்பு அங்கமாக மாணவர்களின் படைப்புகள் அமைந்திருந்தன.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)