பொது

எஸ்.டி.ஆர்: தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் வழங்கப்படவுள்ளது

17/10/2025 07:13 PM

கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- நவம்பர் மாத மத்தியில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர் தீபாவளியை முன்னிட்டு நாளை முதல் வழங்கப்படவிருக்கிறது.

இந்த நான்காம் கட்ட எஸ்.டி.ஆர் 2025-ஐ 88 லட்சம் பேர் பெறவிருப்பதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நான்காம் கட்டத்திற்காக, அரசாங்கம் 200 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதோடு, நிர்ணயிக்கப்பட்ட 700 ரிங்கிட் வரையில் வழங்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில், நவம்பர் 13-ஆம் தேதி முதல் வழங்கப்படும் நான்காம் கட்ட எஸ்.டி.ஆர் உதவித் தொகைக்கு அங்கீகரிக்கப்பட்ட 200,000 புதிய விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட முதலாம் கட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த உதவித் தொகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கை நான்காம் ​​கட்டத்தில் 83 லட்சத்திலிருந்து, கூடுதல் 500,000 தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முழுவதும் புதிய விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளுக்கான விண்ணப்பங்களைத் திறந்திருக்கும் மடானி அரசாங்கத்தின் முடிவைத் தொடந்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த உதவியின் வழி, மேலும் அதிகமான மக்கள் பயனடையும் வாய்ப்பை வழங்க இவ்வாண்டு முழுவதிலும் எஸ்.டி.ஆர் மற்றும் சாரா 2026-க்கான பதிவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)