பொது

புதிய வீடமைப்பு திட்டங்களுக்கு முழுமையான தொழில்நுட்ப மதிப்பீடு வேண்டும்

22/10/2025 05:18 PM

 ஜாலான் பார்லிமென், 22 அக்டோபர் (பெர்னாமா ) -- ஒவ்வொரு புதிய வீடமைப்பு மேம்பாட்டு திட்ட விண்ணப்பங்களும் அனுமதி  வழங்கப்படுவதற்கு முன்னர் வெள்ள அபாயங்கள் கருத்தில் கொள்ளப்படுவதை உறுதிசெய்ய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை ஜே.பி.எஸ். உட்பட பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய விரிவான தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அமலாக்க தரப்பின் அதிகார வரம்புக்கு உட்பட்ட ஓரிட மையம் மூலம் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

உள்ளூர் வெள்ள பெருந்திட்டம் மற்றும் வருடாந்திர வெள்ள நிலவர அறிக்கையின் அடிப்படையில் அதற்கான மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என்றும் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா கூறினார். 

ஒவ்வொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் வடிகால் அமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு அவை முக்கிய வழிகாட்டி என்று எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான அவர் குறிப்பிட்டார். 

"இருப்பினும், MSMA அமலாக்கத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட பழைய வீடுகளுக்குப் பெரும்பாலான அதிகார வரம்புகளில் போதுமான வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லை. இந்த சூழ்நிலை சில பழைய வீடுகளை வெள்ள அபாயத்திற்குக் கொண்டு செல்கிறது. குறிப்பாக, வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்யும் போது. எனவே, தற்போதுள்ள வடிகால் அமைப்பின் நிலைத்தன்மையை மதிப்பிடுவதற்கும் தேவைப்பட்டால் பொருத்தமான மேம்பாடுகளைச் செயல்படுத்துவதற்கும் பல்வேறு தரப்பினரின் நடவடிக்கை தேவை," என்று டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

இன்று, மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின் போது பாலிக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹம்மது பக்தியார் வான் சிக் எழுப்பிய கேள்விக்கு ஃபடில்லா அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)