சிப்பாங், 27 அக்டோபர் (பெர்னாமா) -- கோலாலம்பூரில், 47-வது ஆசியான் மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இன்று காலை மணி 10.06 அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
மலேசியாவிற்கான தமது இரு நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்ட டிரம்ப், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான Air Force One-இல் புறப்பட்டுச் சென்றார்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் டிரம்ப்பை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சைஃபுடின் மற்றும் மலேசியாவிற்கான அமெரிக்க தூதர் எட்கார்ட் டி.காகன் உட்பட கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் டிரம்ப் தங்கியிருந்த தங்கும் விடுதியிலில் அவரை வழியனுப்பி வைத்தனர்.
தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் APEC உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, டிரம்ப் இன்று ஜப்பான் செல்லவுள்ளார்.
உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் கம்போடிய பிரதமர் ஹன் மானெட் இடையே நடத்தப்பட்ட கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் டிரம்ப்பும் அன்வாரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, மலேசியாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிரம்ப், இன்று ஜப்பான் சென்று சேர்ந்துள்ளார்.
தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் APEC உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஜப்பானுக்குச் சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டின் அரசருடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)