கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) - பரஸ்பர ஆதரவு மற்றும் அவசரகால அரிசி கையிருப்பை திறம்பட நிர்வகிப்பதன் மூலம், விநியோகச் சங்கிலி மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒத்துழைப்பை மேற்கொள்ளும்படி ஆசியானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டு நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையே நெருக்கமான ஒத்துழைப்பு, மீள்தன்மை கொண்ட விநியோக வழிகளை உருவாக்குதல், பயிற்சி திட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல் ஆகியவை அவசியமானது என்று, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர்தெரிவித்தார்.
"உணவு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அவசரக்கால அரிசி கையிருப்புக்குப் பங்களித்த எங்கள் சக உறுப்பினர்களை அழைப்பதில் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இவை மூன்று நாடுகளுக்கும் ஆசியானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவும் அம்சங்கள்," என மார்கோஸ் கூறினார்.
இன்று நடைபெற்ற 28-வது ஆசியான் ப்ளஸ் திரீ உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்கோஸ், ஆசியான் நாடுகளிடையே, குறிப்பாக உணவுப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் அமல்படுத்தப்படும் வலுவான ஒத்துழைப்பையும் மார்கோஸ் பாராட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)