பொது

ஆசியான் : சாலைகள் மூடப்படுவதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை - பி.டி.ஆர்.எம்

22/10/2025 07:58 PM

ஜாலான் பினாங், 22 அக்டோபர் (பெர்னாமா ) -- 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு நாளை முதல் நடைபெறவிருக்கும் வெள்ளோட்டத்திற்கான தற்காலிகமாக சில முதன்மை சாலைகள் மூடப்படவிருப்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அரச மலேசிய போலீஸ் படை PDRM நினைவுறுத்தியுள்ளது.

அதோடு, சம்பந்தப்பட்ட சாலைகள் மூடப்படுவது குறித்து பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருகும்படியும் நெரிசலைத் தவிர்க்க தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அறிவுறுத்தப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நிகழ்ச்சியின் முதன்மை வளாகங்களைப் பார்வையிட்ட டத்தோ ஃபடில் எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள போலீஸ் தஙகளின் பலத்தை அதிகரிக்கவும் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போதைக்குப் ​​போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை JSPTயைச் சேர்ந்த 1,111 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானது என்றும் அவர் கூறினார்.

"இப்போதைக்கு உள்ள எண்ணிக்கையில்தான் இருக்கிறோம். தேவையெனில் எப்போது வேண்டுமானாலும் கூட்டமுடியும். இது ஒரு தேசிய நிகழ்வு என்பதால் வேறு மாநிலத்திலிருந்தும் பணியாளர்கள் வருவார்கள். ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பில் இருக்கின்றனர். இந்த நிகழ்வுக்காக அல்ல பிற நிகழ்வுகளுக்கும் தயார் நிலையில் இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் உடனடியாகப் பதிலளிக்க முடியும்," என்று டத்தோ ஃபடில் மர்சுஸ் தெரிவித்தார்.

உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஆறு நெடுஞ்சாலைகளும் 25 முதன்மை சாலைகளிலும் போக்குவரத்து படிப்படியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படும்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)