புத்ராஜெயா, 29 அக்டோபர் (பெர்னாமா) -- உலக முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்து, உலகளாவிய அரச தந்திரத்தில் ஒரு முக்கிய சக்தியாக நாட்டை வெற்றிகரமாக எடுத்துக்காட்டுவதே, 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்களை நடத்துவதில் மலேசியாவின் வெற்றியாகும்.
உலகம் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற இந்த மாநாடு, அனைத்துலக அளவிலான நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக வழிநடத்தும் மலேசியாவின் ஆற்றலை நிரூபித்ததாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
''வரிப் போர்கள் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியலின் பெரும் சீற்றத்தில் ஆசிய கப்பலை வழிநடத்துவதில் வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு ஆற்றல் கொண்டதல்ல. அமெரிக்க அதிபரையும், பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளையும் அழைப்பதை கற்பனை செய்து பாருங்கள். அவை இரண்டு வெவ்வேறு குழுக்கள்,'' என்றார் அவர்.
2025ஆம் ஆண்டு தொடர்பு அமைச்சின் 'Jasamu Dikenang' நிகழ்ச்சியில் உரையாற்றும்போது ஃபஹ்மி அவ்வாறு குறிப்பிட்டார்.
ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற்றதைத் தொடர்ந்து, ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது.
இன்று காலை அமெரிக்க டாலருக்கு எதிராக நாணய மதிப்பு நேற்று நான்கு ரிங்கிட் 19 சென்னாக இருந்த நிலையில், இது நாட்டிற்கு நேர்மறையான அறிகுறியாகும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)