பொது

மொத்த உதவித் தொகையின் மதிப்பை விமான நிறுவனங்கள் அச்சிடும் பரிந்துரை ஆராயப்படும்

05/11/2025 06:35 PM

கோலாலம்பூர், 5 நவம்பர் (பெர்னாமா) -- பெருநாள் காலங்களில் தீபகற்பத்திலிருந்து சபா சரவாக் மற்றும் லபுவானிற்கான விமான டிக்கெட்டுகளில் அரசாங்கம் வழங்கும் மொத்த உதவித் தொகையின் மதிப்பை விமான நிறுவனங்கள் கட்டாயம் அச்சிடுவதற்கான பரிந்துரையைப் போக்குவரத்து அமைச்சு ஆராயும்.

பயணிகள் தாங்கள் பெறும் மொத்த உதவித் தொகை மதிப்பு குறித்த தெளிவான விவரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழிகளை அடையாளம் காண தங்கள் தரப்பு விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''பெருநாள் காலத்தில் விமான டிக்கெட்டுகளை வாங்கும்போது அரசாங்கம் ஒதுக்கிடும் பெரிய அளவிலான உதவித் தொகை குறித்து சில பயணிகள் அறிந்திருக்க மாட்டார்கள் என்று போக்குவரத்து அமைச்சுக்கு தெரியும்,'' என்றார்  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் 

இன்று மக்களவையில் அரசாங்கம் அத்தகைய அறிவிப்பை கட்டாயமாக்க எண்ணம் கொண்டுள்ளதா என்பது தொடர்பில், சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் விவியன் வோங் ஷிர் யீ எழுப்பிய கேள்விக்கு லோக் அவ்வாறு பதிலளித்தார்.

இவ்வாண்டில் 39,744 விமான டிக்கெட்டுகளுக்கு அமைச்சு ஒரு கோடியே 95 லட்சம் ரிங்கிட்டை செலவிடுவதாக அவர் மேலும் கூறினார். இதன் வழி ஒரு டிக்கெட்டுக்கு 491 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)