விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக்; சபா தொடர்ந்து தோல்வி

02/11/2025 06:22 PM

கோத்தா கினபாலு, நவம்பர் 02 (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்திற்காக நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்திலும் சபா சிலாங்கூரிடம் தோல்வி கண்டது.

இதன் வழி இப்பருவத்தில் இதுவரை நடைபெற்ற எட்டு ஆட்டங்களில் சபா தொடர்ந்து தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே சபா தனது முதல் கோலை அடித்து முன்னணி வகித்தாலும், சொந்த அரங்கில் விளையாடும் கூடுதல் பலத்தை சபா பயன்படுத்திய தவறியது.

முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், சிலாங்கூர் ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தியது.

இரண்டாம் பாதியின், 59-வது நிமிடத்தில் ஃபைசால் ஹலிம் சிலாங்கூர் அணிக்கான வெற்றி கோலை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த வெற்றியின் வழி, புள்ளிப் பட்டியலில் சிலாங்கூர் 5-வது இடத்திலும், சபா 10-வது இடத்திலும் உள்ளன.

இதனிடையே, கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல். சிட்டி எஃப்.சி, கிளந்தான் தி ரியல் வாரியர்ஸ் (Kelantan The Real Warriors) அணியை 2-1 என்ற கோல்களில் தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டம்  கோலின்றி முடிவுற்றாலும் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 65-வது நிமிடத்திலும், 81-வது நிமிடத்திலும் கே.எல். சிட்டி எஃப்.சி கோல்களை அடித்து தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது.

ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் கிளந்தான் தி ரியல் வாரியர்ஸ் தனது ஒரே கோலை அடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)