குவாந்தான், 6 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை தோட்டக்காரர் ஒருவரின் வயிற்றுப் பகுதியில் குத்தி அவருக்கு கடுமையான காயம் ஏற்படுத்தி மரணத்தை விளைவித்த குற்றத்தை, வேலையில்லா நபர் ஒருவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஜபலுல் அக்ஹிர் மட் ஷஃபீ எனும் நபர் கடந்த வெள்ளிக்கிழமை நிக் சுராய்டி முஹமட் என்பவரின் வயிற்றுப் பகுதியில் ஆயுதம் கொண்டு குத்தி வேண்டுமென்றே கடுமையான காயம் ஏற்படுத்தி, மரணம் விளைவித்ததாக அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி, மாலை மணி 6.40 அளவில், குவாந்தானுக்கு அருகே கம்பாங் சாலையில் உள்ள கம்போங் ஶ்ரீ டாமாய் பத்து 7, ஜாலான் பக்தியில் அச்செயலைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 326-ரின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வேளையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
அந்நபருக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி சஸ்லீனா சாஃபீ, தண்டனை வழங்குவதற்காக இவ்வழக்கை நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)