பொது

இணைய குற்றச்செயல்; பாதிப்புகளைத் தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

08/11/2025 07:50 PM

செந்தூல், 08 நவம்பர் (பெர்னாமா) -- அண்மைய காலமாகப் பகடிவதை, துன்புறுத்தல், மோசடி போன்ற குற்றச் செயல்கள் டிக்டாக் உட்பட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இணைய குற்றச்செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு இணைய குற்றச்செயல்களால் பயனர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து டிக்டாக் இணைய விழிப்புணர்வு மற்றும் நெறிமுறை நிகழ்ச்சி இன்று கோலாலம்பூர் செந்தூலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் குற்றச் செயல்களினால் பயனர்களிடையே ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கமளிக்க இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளரான 'Intellize Tech Services' நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரி டாக்டர் கவிதா முத்தி தெரிவித்தார்.

"பகடிவதை, துன்புறுத்தல், மோசடி போன்ற குற்றச் செயல்களுக்கு ஆளாவதால் மக்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆகையால் இதிலிருந்து வெளிவரவோ அல்லது இம்மாதிரியான சூழலை எவ்வாறு கையாளலாம் என்பதற்கே இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது," என்று ஏற்பாட்டாளர் டாக்டர் கவிதா முத்தி குறிப்பிட்டார்.

மலேசிய டிக்டாக் நிறுவனம் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னதாகப் பினாங்கு, மலாக்கா, சைபர்ஜெயா, கிள்ளான் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டதாக டாக்டர் கவித்தா கூறினார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயன் பெற்றவர்கள் சிலர் சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகளை முன்வைத்தனர். 

''டிக்டாக்கில் தவறான வார்த்தைகள் அல்லது குற்றச்செயல் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அதனை பார்த்து கற்றுக்கொள்வதால் பகிரும் முன் அது சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக அமைக்கூடியதா என்பதை யோசித்து பகிர வேண்டும்.''என்றார் பங்கேற்பாளர் கல்பனா சுப்ரமணியம். 

மேலும், "தவறான செயல்கள் அதிகமாக நடக்கின்றன அதனால் 15 வயதுக்குக் கீழ்பட்டவர்கள் டிக்டாக் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சில தகாத வார்த்தைகள் தணிக்கை செய்யப்படவில்லை," என்றார் பங்கேற்பாளர்  கற்பகம் தங்கவேலு. 

செந்தூல், தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர், பெற்றோர், கல்வியாளர் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)