பொது

தேமுவை விட்டு விலகுவது குறித்து ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் தீர்மானிக்கும்

16/11/2025 07:02 PM

ஷா ஆலாம், 16 நவம்பர் (பெர்னாமா) -- தேசிய முன்னணியில் இருந்து ம.இ.கா விலகி பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு அக்கட்சியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட பேராளர்கள் இன்று ஏகமனதாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மிக விரைவில் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்தி பெரிக்காத்தான் நேஷனல் உட்பட எந்தவொரு கூட்டணியிலும் இணைவது குறித்த இறுதிக்கட்ட முடிவெடுத்த பின்னரே இதன் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தம்மால் வெளியிட முடியும் என்று ம.இ.கா தலைவர் தான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

''இது பிரதிநிதிகளின் முடிவாகும். எனவே பேராளர் மாநாட்டில் இருந்தவாறு எங்களால் அறிக்கை வெளியிட முடியாது. மத்திய செயலவையினர் இதை முடிவு செய்வார்கள். அதேவேளையில் இது குறித்து எவ்வகை முடிவையும் எடுப்பதற்கு உறுப்பினர்கள் வெளிப்படையான முறையிலே இணக்கம் தெரிவித்து விட்டனர்,'' என்றார் எஸ்.ஏ.விக்னேஸ்வரன். 

ம.இ.கா உறுப்பினர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட பேராளர்களின் முடிவுக்கு மதிப்பளிக்கப்பட்டாலும் இது மிகவும் முக்கியமான முடிவு என்பதால் நன்கு ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டிய கடப்பாட்டில் தலைமைத்துவம் உள்ளதால்தான் தாம் கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார்.

இன்று காலை சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள ஐடிசிசி மாநாட்டு மையத்தில் ம.இ.காவின் 79வது பேராளர் மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற பேராளர்கள் உடனான கூட்டுத் தீர்மானத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அத்தகவல்களை வழங்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)