பினாங்கு, 14 நவம்பர் (பெர்னாமா) -- 247.7 கிலோகிராம் எடையிலான கஞ்சா வகை போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக இரண்டு அந்நிய நாட்டினர் உட்பட எண்மர் இன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
நீதிபதிநூருல் ரஷிதா முஹமட் அகித் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டாலும் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட, முஹமட் நூர் நோர் ஹிஷாம், முஹமட் ஹபீஸ் முஹமட் ஜைனி, முஹமட் அமிருல் ஃபஸ்ரின் எம்டி கமில், முஹமட் பாரிஸ் இர்சைன் பிடின், சியாஸ்ரியல் அய்மான் ஷா செரோனிசம், மற்றும் முஹமட் ஃபேர்ஸ் 'ஆர்மி சுசி' ஆகியோர், 20 வயதில் இருந்து 37 வயதிற்கு உற்பட்டவர்கள் ஆவர்.
குற்றம் சாட்டப்பட்ட இதர இரு அந்நிய நாட்டினரில், ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சேர்ந்த நவீட் உசேன்னும் மற்றொருவர் தாய்லாந்தைச் சேர்ந்த நூர்சமிரா
ஹயீமாஹாவும் ஆவர்.
கடந்த நவம்பர் 5-ஆம் தேதி லோரொங் கமெலிய 5-இல் உள்ள ஒரு வீட்டில் 247.7 கிலோ கிராம் கஞ்சாவை விநியோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கு, 1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39B-இன் கீழ் விசாரிக்கப்படுவதோடு அதே சட்டம் செக்ஷன் 39B(2)-டின் கீழ் தண்டனை வழங்கப்படலாம்.
அவர்கள் அனைவரையும் ஜாமினில் விடுவிக்க அனுமதிக்காத நீதிமன்றம், இவ்வழக்கை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)